அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதரிகளே!
இன்று எமது சகோதரிகளில் அதிகமானோர் ஹபாயா அணிகின்றார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.இது பாராட்டக்கூடிய விடயம்.
உண்மையில் ஹபாயா பெண்களுக்கு ஒரு கௌரவமாகும். அது எமக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது. ஹபாயா அன்னியவர்களின் பார்வைக்கு திரையிடுகிறது. ஒரு பெண்ணின் கற்பொழுக்கத்திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் ஹபாயா சான்றாக விளங்குகிறது. இதனால் நம்மை காண்போர் மதிக்கிறார்கள், கௌரவிக்கிறார்கள். கெட்ட எண்ணத்துடன் நம்மை அணுக முனைய மாட்டார்கள். அந்த வகையில் ஹபாயா பெண்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதமாக விளங்குகிறது.
ஆனால் இன்றைய எம்சகோதரிகளிலே பெரும்பாலானோர்,
அணியும் ஹபாயாக்களை பார்த்தோமானால்...
எத்தனை நவீனத்துவங்கள்…
நவீனங்கள் மட்டுமா.... டிசைன்கள் மட்டுமா......
நமது அங்கங்களை தெரியக்கூடிய வகையிலே...
உள்ளாடைகள் தெரியக்கூடிய வகையிலே....
நமது உள்ளுறுப்புக்களின் அளவுகள் தெரியக்கூடிய வகையிலே....
மிகவும் இறுக்கமாக, உடலுடன் ஒட்டியதாக அணிவதை சாதாரணமாக காணக்கூடியதாக இருக்கின்றது.
கடைகளிலே தளர்வாக (லூசாக) கிடைத்தாலும் கூட அதனை வாங்கி இறுக்கமானதாக தைத்துத்தான் அணிகின்றோம். நாம் அணியும் ஹபாயாக்களை அல்லது ஆடைகளை யாராவது பார்த்து நல்லா இருக்கிறது என்று சொன்னால்தான் நமக்கு நிம்மதியாக தூக்கமே வருகின்றது.
ஒரு சிறிய சம்பவம்....
அழகாக, எடுப்பாக உடை அணிந்து பாடசாலைக்கு செல்லும் ஒரு ஆசிரியை இரண்டு மூன்று நாட்கள் திடீர் என்று பாடசாலைக்கு செல்லவில்லை.
சக ஆசிரியர்கள் சிலருக்கு ஏதோ ஒரு சோகம்... உடனே ஆசிரியைக்கு call பண்ணி என்ன நடந்த என்று விசாரித்த போது, ஆசிரியையும் எனக்கு முக்கியமான வேலை அதனால் வரவில்லை என்று சொல்ல, “ஐயோ... இதை முதல் நாளே சொல்லிருக்கலாமே டீச்சர் நாங்களும் லீவ் எடுத்திருப்போம்” என்று அந்த ஆசிரியர்கள் கவலைப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன.
நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை. நம் சமூகத்திலே நல்ல ஆசிரியர்கள் பலர் இருக்கின்றார்கள்.இருந்தாலும் சமூகத்திலே இப்படியான ஒருசிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். தன்னுடைய பொண்டாட்டி தொலைந்து போனால்கூட கவலைப்படுவதற்கு இல்லை, ஆனால் தன்னுடன் வேலை செய்கின்ற அழகாக, எடுப்பாக, ஆடை அணிந்து, மேக்கப் போட்டு வரும் பெண்ணை பார்த்து “குட்மோர்னிங்” சொல்லி அவளுடன் ஓரிரு வார்த்தைகள் பேசினால்தான் அவர்களுக்கு அன்றைய நாளே சந்தோசமாய் ஆரம்பிக்கிறதாம். ஒரு நாளைக்கு அவளைக் காணவில்லை என்றால் அவர்களுக்கு ஏதோ ஒன்றை இழந்துவிட்டதை போன்று பதறிப்போய்விடுவார்கள்.
அன்பார்ந்த சகோதரிகளே!
இந்த பாவம் யாருக்கு கிடைக்கும்...???
ரசிக்கும் ஆண்களுக்கா...???
ரசிக்க வைக்கும் பெண்களுக்கா...???
சிந்தித்து பாருங்கள்.
சகோதரிகளே!
இது போன்ற இன்னும் நிறைய சம்பவங்கள் அலுவலகங்களிலும் ஏனைய இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவ்வாறான சம்பவங்கள் நமது உள்மனதில் ஒரு வகையான சந்தோசத்தை கொடுத்தாலும், அல்லாஹ்விடத்தில் இது பெரும் பாவம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அன்பான சகோதரிகளே!
ஒரு விடயத்தை நன்றாக விளங்கி கொள்ளுங்கள்.
ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக நரகத்திலே இருப்பதற்கு காரணம் நம்முடைய செயற்பாடுகள்தான்.
நாம் இறுக்கமாக ஆடைகளை அணிவதன் மூலம் ஆண்கள் நம்மை பார்க்காமல் இருப்பார்களா என்ன???
இறுக்கமான ஆடைகளை அணிவதனால் முகத்தை பார்க்கும் அவர்களின் பார்வைகூட வேறு எங்கெங்கோ செல்வதை நாம் அவதானிக்கவில்லையா???
ஹபயாக்களை அல்லது ஆடைகளை இறுக்கமாக அணிவதனால் அவர்களின் மனோ இச்சையை தூண்டுகின்றோமா இல்லையா???
ஹபாயாக்களில் புதுவித டிசைன்களை தோற்றுவித்து அவர்களின் பார்வையை தன்பக்கம் இழுக்க செய்வது மட்டுமல்லாமல் இறுக்கமாக அணிந்து தனது அங்கங்களை வெளிக்காட்டி, உள்ளாடைகள் கூட வெளியில் அடையாளம் தெரியும்படி செய்து அவர்களையும் பாவத்தின் பக்கம் அழைத்து நாமும் பாவத்தை தேடிக்கொள்கின்றோமே! இதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டாமா...???
இன்னும் ஒரு முக்கியமான விடயம் எமது சகோதரிகளிடத்தில் அதிகமாக காணப்படுகின்றது.
அதாவது, நாம் வேலைக்கு அல்லது வெளி இடங்களுக்கு செல்லும் போது அழகாக ஆடை அணிந்து, தலையை மறைத்து செல்கின்றோம். அதே நேரத்தில் நமது வீதிகளிலே வருகின்ற மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், மற்றும் ஏனைய வியாபாரிகளிடத்தில் பொருட்களை வாங்கும் போது நாம் அவர்களுக்கு முன்னால் எவ்வாறு நடந்து கொள்கின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும்.
வீடுகளிலே எவ்வாறு இருக்கின்றோமோ அவ்வாறே வீதிகளுக்கு வருகின்றோம், வேண்டுமானால் ஒரு சோளையோ அல்லது துண்டையோ (துப்பட்டாவை) எடுத்து நெஞ்சிலே போட்டு கொள்வது, அதை ஒழுங்காக போடுவதும் இல்லை, ஒரு பகுதி மூடி மறு பகுதி திறந்த நிலையில் வியாபாரிக்கு முன்னால் நிற்பது மட்டுமல்லாமல் அவரிடத்தில் பொருட்களை வேகமாக வாங்கி செல்லும் பழக்கம்கூட நம்மிடத்தில் இல்லை. அவருடன் பேச்சுவார்த்தை நடாத்தி, ஒரு பொருள் வாங்குவதற்காக 9000 கேள்விகள் கேட்டு, அந்த பொருட்களை தொட்டு பார்த்து, தூக்கி பார்த்து, நசிச்சி பார்த்து, அவர் கூறும் விலையில் பாதிக்கும் குறைவான விலைக்கு அதை நிர்ணயம் செய்து, வியாபாரியின் திட்டுதளுக்கும் ஆளாகி, இதற்காக 20, 30 நிமிடங்களை செலவழித்து, அந்த நேரங்களில் வீதியில் செல்கின்ற ஏனைய ஆண்கள் நம்மை பார்த்து செல்வதும், பகிடி பண்ணுவதும் நாளாந்தம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
அன்பான சகோதரிகளே!
இவர்களும் ஆண்கள்தான், இவர்களுக்கு முன்னால் எவ்வாறு நடக்க வேண்டும் என்ற ஒழுங்குகளை நாம் பேணிக்கொள்ள வேண்டும்.
அந்நிய ஆண்கள் நம்முடைய உடல் அங்கங்களை நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ ரசிப்பதில் இருந்தும் நம்மை நாம் பாதுகாக்க வேண்டும்.
எனதருமை சகோதரிகளே!
நம்முடைய அழகும், கவர்ச்சியும் நம்முடைய கணவருக்கு மட்டும்தான்.
அதை பார்த்து ரசிப்பதற்கு தகுதியுடையவரும் நமது கணவர் மட்டுமே.
அது அந்நிய ஆண்களுக்கு இல்லை.
இல்லவே இல்லை.
ஒரு போதும் இல்லை.
நமது அழகையும், அங்கங்களையும் அன்னிய ஆண்கள் ரசிக்கும்படி ஆடை அணிந்து வீணாக நரகத்தை தேடிக்கொள்ளாமல் இருப்போம்.
ஆக்கம்:
உங்கள் சகோதரி ஷாமிலா லரீப்
Your Comments