அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 22.07.2015 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நாம் சகலவிதமான தீவிரவாத செயற்பாடுகளையும் அநியாயங்களையும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
இஸ்லாம் மனித இனத்திற்கு கருணை காட்டும் மார்க்கமாகும். அதன் அடிப்படை போதனைகளாக சமாதானம், அமைதி, பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் போன்றன காணப்படுகின்றன. இஸ்லாம் மனித உயிருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றதென்றால் ஒரு தனி மனிதனுடைய கொலையை முழு மனித சமூகத்தினதும் கொலையாகக் கருதுகின்றது. இஸ்லாம் போதிக்கின்ற சமாதானம், அமைதி மற்றும் சகோதரத்துவம் என்பன சாதி, மத பேதமின்றி அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவையாகும். இஸ்லாம் எமக்கு அனைத்து மனிதர்களுடனும் சமாதானமாகவும், நீதமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்ளுமாறு ஏவுகின்றது. மேலும் அநியாயம் இழைத்தல், தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் குழப்பம் விளைவித்தல், கடும்போக்காக நடந்துக் கொள்ளுதல், கொலை செய்தல் ஆகியவற்றை பெரும் பாவங்களாகவும், குற்றங்களாகவும் இஸ்லாம் கருதுகின்றது.
ஒரு கடுமையான, தீவிரவாத, இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு அமைப்பாகும். இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயற்படும் அமைப்பாக இது காணப்படுகின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேற்குலக ஊடகங்கள் “ஜிஹாத்” என்ற சொல்லுக்கு கொலை செய்தல், அநியாயமான முறையில் போர் தொடுத்தல் போன்ற பிழையான கருத்துக்களை கொடுப்பதற்கு முயற்சிக்கின்றனர். எந்தவொரு அமைப்பும் “ஜிஹாத்” என்ற சொல்லை அப்பாவி மக்களை கொலை செய்வதற்காக பயன்படுத்துமேயானால் அது இஸ்லாத்திற்கும் அதன் போதனைகளுக்கும் முற்றிலும் முரணானதாகவே காணப்படும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட “சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்” எனும் வெளியீடுகளில் “ஜிஹாத்” பற்றிய மிகச் சரியான தெளிவு வழங்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் IS (ISIS) அமைப்பைக் கண்டித்து 06.07.2014 ஆம் திகதி SLBC யில் ஒலிபரப்பப்பட்ட உரையும் 30.08.2014ல் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். பல சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், நாடுகளும் IS (ISIS) என்பது ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணாக செயற்படுகின்ற ஒரு அமைப்பு என்றும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளன.
IS (ISIS) போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் தீவிரவாத அமைப்புகளோடு எவராவது தொடர்புபட்டால் நாம் அதனை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றௌம். இவ்வாறான அமைப்புகளுக்கும் இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதையும் உறுதியாகக் குறிப்பிடுகின்றோம்.
எவராவது ஒரு தனிநபர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்கின்றௌம். எமது நாட்டை இவ்வாறான சமூகத்துக்கு எதிரான தீய செயல்களிலிருந்து பாதுகாப்பதற்காக அரச நிறுவனங்களுக்கு எமது உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
மேலும், ஊடகங்கள் இது சம்பந்தமான விடயங்களில் ஈடுபடும் போது பொறுப்புணர்வுடனும் பக்கச்சார்பு இல்லாமலும் ஈடுபட வேண்டும். ஊடகங்கள் இவ்வாறான விடயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது திரிபுபடுத்தல் மற்றும் பிழையான செய்திகளை சமூகத்துக்கு வழங்குதல் போன்ற சமூக ஒற்றுமையையும், சகவாழ்வையும் பாதிக்கின்ற செயற்பாடுகளையும் முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களாகிய நாம் எமது தாய் நாட்டில் பல நூற்றாண்டுகளாக நாட்டுப் பற்றுடனும், ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ்ந்து வருகின்றௌம். மேலும் எமது தாய்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளிலும், இலங்கையின் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளிலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம்.
All Ceylon Jamiyyathul Ulama (ACJU)
Muslim Council of Sri Lanka (MCSL)
Sri Lanka Jamat e Islami (SLJI)
Jama’athus Salama (MFCD)
Jamiyyathus Shabab (AMYS)
Al-Muslimath
International Islamic Relief Organization (IIRO)
World Assembly of Muslim Youth (WAMY)
All Ceylon YMMA Conference (YMMA)
Thableegh Jama’ath
All Ceylon Thowheedh Jama’ath (ACTJ)
Colombo District Masjid Federation (CDMF)
Your Comments